தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளி யில், புறக்கணிப்புக்குள்ளாகும் நபர் களாகவே திருநங்கைகள் இருக்கிறார்கள். அவர்களுடன் பேசினாலோ, வண்டியில் அழைத்துச் சென்றாலோ, உடன் உண வருந்தினாலோ, மற்றவர்கள் நம்மைப் பார்க் கும் விதம் சற்று மாறுபடும். அவர்களும் நம்மில் ஒன்றானவர்கள் தான். அவர்களுக்கும் சுகம், துக்கம், அறிவு, உணர்ச்சி என்று எல்லாமே உள்ளது என்பதை பொதுச்சமூகத்தின் மனது ஏற்க மறுப்பதால்தான் சமூகத்தை விட்டே ஒதுக்கிவைக்கும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய புறக்கணிப்புகளையும் தாண்டி, பெற்றோரின் ஆதரவுடனும், வெற்றி பெற்றாக வேண்டுமென்ற உத்வேகத்தோடும், தங்கள் இலக்கை நோக்கி முன்னேறும் திருநங்கைகளும் நம்மோடு இருக்கிறார்கள்.
மாடலிங் உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்திருக்கிறார், திருச்சி கல்லுகுழி பகுதியில் வசித்துவரும் திருநங்கையான ரியானா சூரி. இவர், எம்.எஸ்.சி. இயற்பியல் படித்துள்ளார். இவருடைய மாடலிங் உலகம் குறித்து கூறுகையில், "மாடலிங் செய்வதில் ஆர்வம் அதிகம் என்பதால், மாடலிங் மற்றும் நடனத்தில் டிப்ளமோ முடித்துவிட்டு, 2019ஆம் ஆண்டிலிருந்து மாடலிங் செய்துவருகிறேன். மீதமுள்ள நேரத்தில் நடனம் கற்றுத் தருகிறேன். மாடலிங்கின் மூலம், புதிய டிசைன்களில் உள்ள ஆடைகள், நகைகள், அழகு சாதனப் பொருட்கள் எனப் பலவிதமான பொருட்களை, அழகிய ஆடை அலங்காரத்துடன் ஒய்யாரமாக நடந்துவந்து பார்வையாளர்களைக் கவரும் போட்டிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் பங்கேற்று முதல் ரன்னராக தெரிவு செய்யப்பட்டேன். அதன்பின், இந்த மாதம் டெல்லியில் நடைபெறும் மிஸ் இந்தியா மாடலிங் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளேன். கடந்த செப்டம்பர் மாதம் மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொள் வதற்கான போட்டி, இணையதளம் மூலம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தேர்வானேன். நிச்சயம் அதில் வெற்றிபெறுவேன். அதற்காக என்னை தயார் செய்து வருகிறேன். என்னுடைய குடும்பத்தார் எனக்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், அன்பும், அரவணைப்பும் இல்லையென்றால் என்னால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. என்னுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந் தால், என்னைப் போன்று அர வணைக்க ஆதரவு இல்லாத திரு நங்கைகளுக்கு நிச்சயம் ஆதரவு தருவேன். அவர்களின் முன்னேற்றத் தில் என்னுடைய பங்கு இருக்கும்'' என்றார்.
அதேபோல் மற்றொரு திரு நங்கையான ஜோஸ்கா ஜாஸ்மீன். திருநெல்வே- மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்தவர். தற்போது திருச்சி சட்டக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு சட்டம் பயின்று வரு கிறார். இவரிடம் நாம் பேசுகையில், "நான் 4வது படிக்கும்போதே என்னுடைய தந்தை உயிரிழந்தார். அம்மா செண்பகம் தான் அங்கன் வாடியில் பணியாற்றிக்கொண்டு வீட்டையும் கவனித்துக் கொள்கிறார். நான் படித்தது எல்லாமே அரசுப் பள்ளியில் தான். எனக்கு பொறியியல் துறையில் ஆர்வம் இருந்ததால், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தேன். அதேபோல், சட்டம் பயில வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. எனவே இன்ஜினியரிங்கை முடித்துவிட்டு, சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். எனக்கு திருச்சி சட்டக் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்தது. முதலாம் ஆண்டு மட்டும் திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் படித்தேன். ஆனால் வெளியே அறை எடுத்துத் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கல்லூரிக்கு 4 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். அது பாதுகாப்பானதாக இல்லாததால், கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று இரண்டாம் ஆண்டு திருச்சியில் வந்து சேர்ந்தேன். எனக்குத் தெரிந்து, தமிழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞர்களாக 5 நபர்கள் தான் இருப்பார்கள். நானும் சட்டம் முடித்து சிறந்த சட்ட ஆலோசகராக வருவதே என்னுடைய விருப்பம். நிச்சயம் இந்த சட்டத்தின் மூலம் என் சமூகத்திற்கு என்னாலான உதவிகளைச் செய்வேன்.
தற்போது திருச்சியில் தங்கியிருந்து பயின்று வருகிறேன். எனக்கு, என்னு டைய பெற்றோர் அன்பையும், ஆதர வையும் தந்ததால்தான் இன்ஜினியரிங் பயின்றேன். தற்போது சட்டம் பயில்வதற் கும் அவர்கள் தான் என்னை உற்சாகப் படுத்தி வருகிறார்கள். வெளியே தனியறை எடுத்து தங்குவது சிரமம் என்பதால், இங்குள்ள திருநங்கைகள் அமைப்பில் இணைந்து ரியானா அக்காவுடன் வசித்து வருகிறேன். அவர்கள் எனக்கு ஆதரவு தந்து, என்னுடைய கல்விக்கும் போதுமான உதவிகள் செய்து வருகிறார்கள். நானும் அவர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்து, ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருந்து வருகிறோம்'' என்று கூறுகிறார்.
இந்த சமூகத்தில், திருநங்கைகளுக்கு அவர்களுடைய குடும்பங்களே ஏணிப்படிகளாக இருந்துவிட்டால், அவர்களுடைய இலக்கை அடைய நல்ல வாய்ப்பாக இருக்கும். பெற்றோர்களின் ஆதரவின்மையும், சமூகத்தின் புறக் கணிப்பும் தான் அவர்களை திசை மாறிய பறவைகளாக்கிவிடுகின்றன. பெற்றோரின் ஆதரவாலும், சமூகத்தின் புரிதலாலும் சாதித்துள்ள இவர்களைப் போலவே இனி வரும் காலங்களில், திருநங்கை களின் கல்வி வளர்ச்சி மென்மேலும் அதிகரிப்பது உறுதி.